சென்னை
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அணை ஏரியைப் பூங்கா தீவுகளுடன் ஒரு புதிய ஏரியாக அரசு அமைக்க உள்ளது.
சென்னையில் பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுப் பல புதிய குடியிருப்புக்கள் முளைத்துள்ளன. அவ்வகையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அணை ஏரியைச் சுற்றியும் ஏராளமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏரியில் கழிவு நீர் விடப்படுவதில்லை என்றாலும் மழை நீர் சேகரிக்க முடியாத நிலையில் ஏரி பராமரிப்பின்றி இருந்தது. தற்போது மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
எனவே பராமரிப்பு அற்று கிடக்கும் பல நீர் தேக்கங்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும் என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கரணை ஏரியைச் சீரமைக்கும் பணி இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்டு அதன் பிறகு கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டது. தற்போது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு இணங்க அந்த பணி மீண்டும் தொடங்க உள்ளது.
இந்த ஏரி முன்பு போல் நீர் சேகரிப்புக்கு மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட புதிய ஏரியாக உருவாக உள்ளது. கடந்த வாரம் சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் இங்கு வருகை தந்து ஏரியைப் பார்வை இட்டார். அவருடன் செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி அதிகாரி செந்தில்குமார், மற்றும் இயக்குநர்கள் திருநாவுக்கரசு, புருஷோத்தமன், செங்கல்பட்டு மாவட்ட நீர்நிலை மேம்பாட்டுப் பொறியாளர் ராஜவேலு ஆகியோர் உடன் இருந்தனர்
அப்போது அவர், “ஏரியின் கரைகளைப் பலப்படுத்திச் சுற்றிவர பேவர் பிளாக்குகளுடன் கூடிய நடை பாதை அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இங்கு புதிய பூங்கா தீவுகள் அமைக்கப்பட்டு அங்கு பழ மரங்கள் நட உள்ளன. இதன் மூலம் புயல் போன்ற நேரங்களில் காற்றின் வேகம் குறைவதோடு மழை வளமும் அதிகரிக்கும் இந்த புதிய ஏரியின் அருகே மலை ஒன்றை அமைத்து அங்கு மலைக்காடுகளை வளர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்புக்களையும் இந்த ஏரியுடன் இணைக்க உள்ளோம். இதற்கும் மலை அமைப்பதற்கும் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் பணிகள் நடக்க உள்ளது. அதன் பிறகு இந்த ஏரிப்பகுதி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உருவாகும். விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.