கோவை:  தமிழ்நாட்டில் விரைவில் 500 மின்சார பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  கோவையில் புறநகர் மற்றும் நகர்ப்புற பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலம் சார்பில் 20 புறநகர் மற்றும் 1 நகர்ப்புற பேருந்தை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க முதல்வர் நிதி ஒதுக்கி பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சுமார் 1000 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு இப்போது புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி முதல்வர் தர்மபுரியில் 11 புதிய பேருந்துகளை இயக்கி துவக்கி வைத்தார். அதேபோல 15 ஆம் தேதி திருவள்ளூரில் 10 பேருந்து துவக்கி வைத்தார். மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று கோவையில் அரசு போக்குவரத்து கழகத்திற்கு உள்பட்ட கோவை மண்டலத்தில் 21 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 20 புறநகர் பேருந்துகளும் ஒரு நகர்ப்புற பேருந்தும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையல்லாமல் கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உள்பட்ட உதகை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளிலும் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

மொத்தம் 7,200 புதிய பேருந்துகள் தமிழக அரசால் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட இருக்கிறது. அதில் முதல் கட்டமாக 1000 பேருந்துகள் தேர்தலுக்கு முன்பாகவும், இந்த வாரத்திற்குள் 300 பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதனைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பேருந்துகளை வழங்க வழங்க மக்கள் பயன்பாட்டிற்கு படிப்படியாக கொண்டுவரப்படும்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அதிக பேருந்துகள் வாங்காததால், இருந்த பழைய பேருந்துகளை மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகரங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்குவதற்கு உத்தரவிடப்பட்டு முதற்கட்டமாக சென்னையில் அடுத்த வாரம் அந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. அதற்குப் பிறகு கோயம்புத்தூருக்கும் அந்த பேருந்துகள் வர உள்ளன. பழைய பேருந்துகளில் அடித்தள சட்டம் சிறப்பாக இருக்கக்கூடிய பேருந்துகளை புதிய கூடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 800 பேருந்துகள் கூடுகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் 500 பேருந்துகள் வாங்குவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு, முதல் 100 பேருந்துகளுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் முடிக்கப்பட்டு முதல் 100 பேருந்துகள் சென்னையிலும், அடுத்த 400 பேருந்துகள் கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் பயன்பாட்டிற்கு வரும். மாறி வருகின்ற கால சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப வேகமாக இயங்கும் பேருந்துகள் வரவுள்ளது. சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பேருந்துகள் பயணிக்கும் வேகம் கூடியுள்ளது. எனவே, இதில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் சீர் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதிக விபத்துகள் நடப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. அதுகுறித்து போக்குவரத்து துறை துணை ஆணையரைக் கொண்டு விசாரணை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரம் அந்த விசாரணை நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் எங்கே தேவைப்படுகிறதோ, மக்களின் கோரிக்கையை ஏற்று, பிரச்னை ஏற்படும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேட்டுப்பாளையம் சாலையில் அதிவேகத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் இயக்குவது மற்றும் விபத்து ஏற்படுவது குறித்த விசாரணை இதுவாகும். மினி பேருந்துகள் குறித்த கருத்துகளை அரசுக்கு தெரிவிப்பதற்கு காலம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 22ஆம் தேதி உள்துறை செயலாளர் தலைமையில் குறித்து கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள வரைவு அறிக்கை முழுமை செய்யப்பட்டு, முதல்வரின் அனுமதி பெறப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும்.

அதற்குப் பிறகு அந்த மினி பேருந்துகள் இயக்குவது குறித்த விண்ணப்பங்கள் நிறைவேற்றப்பட்டு தேவைப்படும் பகுதிகளில் அனுமதி வழங்கப்பட்டு மினி பேருந்துகள் இயக்கப்படும். கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தில் முறையாக பேருந்துகள் உள்ளே வருவதில்லை என்ற புகார் பல்வேறு மக்கள் அமைப்புகள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தோடு ஆலோசனை மேற்கொண்டு இந்த பேருந்து நிலையம் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.