கொரோனா ஊரடங்கு முதல் இந்தியாவில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பல்வேறு படங்கள் வெளியிட முடியாமல் முடங்கின.

இந்தச் சமயத்தில்தான் இந்தியாவில் ஓடிடிக்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின. பல்வேறு புதிய நிறுவனங்களும் ஓடிடி தளத்தைத் தொடங்கின.

அமேசான், ஹாட் ஸ்டார், சன் நெக்ஸ்ட், சோனி லைவ் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கிடையே படங்களின் உரிமைகளைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவின.

சோனி லைவ் ஓடிடி தளம் தமிழில் தொடங்கப்படாமல் இருந்தது. ஜூன் 25-ம் தேதி முதல் தமிழில் சோனி லைவ் ஓடிடி தளம் களமிறங்குகிறது. இதில், விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘தேன்’ திரைப்படம் முதலில் வெளியாகவுள்ளது. அதற்குப் பிறகு ஜூலை மாதத்தில் ‘நரகாசூரன்’, ’கடைசி விவசாயி’ உள்ளிட்ட படங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சோனி லைவ் தனது தமிழ் கன்டென்ட் ஹெட்டாக தனஞ்செயனை நியமித்துள்ளது.

தயாரிப்புத்துறையில் பல வருட அனுபவம் பெற்றவர் தனஞ்செயன். மோசர்பேர் நிறுவனம் தமிழில் திரைப்படங்கள் தயாரித்த போது அதன் தலைமைப்பொறுப்பில் இருந்து அவர்தான் கவனித்துக் கொண்டார்.

யுடிவி நிறுவனம் தமிழில் படங்கள் தயாரிக்க திட்டமிட்டபோதும், அதன் நிர்வாகப் பொறுப்பு தனஞ்செயனுக்கு அளிக்கப்பட்டது.

தற்போது ஒடிய மொழி படம் ஒன்றின் உரிமையை வாங்கி தமிழில் தயாரித்து, இயக்கி வருகிறார். இதன் திரைக்கதையை இயக்குனர் ராம் எழுதியுள்ளார்.