ஐதராபாத்

இன்று தெலுங்கானா மாநிலத்தின் புதிய முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்கிறார்..

நடந்து முடிந்த தெலுங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதியை ஆட்சியில் இருந்து அகற்றியது. காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவராகவும், தெலுங்கானாவின் அடுத்த முதல்வராகவும் அந்த கட்சியின் மாநில தலைவர் ஏ.ரேவந்த் ரெட்டியை கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

சுமார் 56 வயதாகும் ரேவந்த் ரெட்டி இன்று தெலுங்கானாவின் புதிய முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். மதியம் 1 மணிக்கு இந்த பதவியேற்பு விழா ஐதராபாத்தில் உள்ள எல்.பி. விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

நேற்று டில்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை ரேவந்த் ரெட்டி சந்தித்தார். அவருடைய பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி கலந்து கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.