டில்லி

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, தனது மகள் பிரியங்கா காந்தியை அடுத்த தலைவர் ஆக்கும்  முயற்சியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 8ஆம் தேதியன்று டில்லியில் மூத்த தலைவர்கள் கூட்டம் ஒன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆம் வருட கொண்டாட்டத்தை பற்றி விவாதிக்க கூட்டப்பட்டது.  அந்த கூட்டத்தின் இறுதியில் இளைய தலைமுறைக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என சோனியா காந்தி  கேட்டுக் கொன்டதாக சொல்லப்படுகிறது.   இதில் தாமும், மன்மோகன் சிங் போன்ற பலரும் ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி பெயர் தெரிவிக்க விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர், “இது ஒரு சாதாரண அறிவிப்பு இல்லை.   சோனியாவின் மனதில் வேறு ஏதோ எண்ணம் உள்ளது.  ஒரு சிறு குழுவில் தனது எண்ணத்தை பிரதிபலித்து, அவர்களின் சம்மதம் கிடைத்தால் கட்சியின் முழு சம்மதமும் கிடைக்கும் என்னும் ஒரு ஊகத்தின் பேரில் இதை தெரிவித்திருக்கக் கூடும்” என தெரிவித்தார்.

சோனியாவின் மனதில் அடுத்த செயல் தலைவராக ப்ரியங்கா காந்தியை அமர்த்தும் எண்ணம் உள்ளதாலேயே இந்த கருத்தை தெரிவித்திருப்பார் என விஷயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    இந்த கூட்டத்துக்கு தற்போதைய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரவில்லை.   அவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததால் வரவில்லை என சொல்லப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அந்த பெயர் தெரிவிக்க விரும்பாதவர், “நாம் ஒப்புக் கொள்கிறோமோ இல்லையோ, காங்கிரஸ் கட்சியை தற்போது வழி நடத்திச் செல்ல நேரு குடும்பம் மட்டுமே உள்ளது.   முன்பு நரசிம்மராவ் பிரதமராகவும், சிதாராம் கேசரி கட்சித் தலைவராகவும் இருந்த போதிலும்,  அந்த குடும்பத்தின் வழிகாட்டுதலின்படியே கட்சி நடந்தது என்பது கண்கூடான உண்மை.   அவர்கள் இல்லையென்றால் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.   தற்போது மோடி பெரும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் நிலையில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற நேரு குடும்பத்தினர் தலைமையில் மட்டுமே சாத்தியம் ஆகும்” என கூறி உள்ளார்.

கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்துள்ளது என தலைவர்கள் பலரும் தெரிவித்துள்ள இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரியவருகிறது.