டெல்லி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்க இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அனுமதி வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜீவ் சாதவ், முன்னாள் எம்எல்ஏ தேவேந்திர யாதவ் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலர் மணீஷ் சத்ரத் ஆகியோரை கொண்டு, கொரோனா தொடர்பான விஷயங்களை ஒருங்கிணைப்பதற்காக, கொரோனா கட்டுப்பாட்டு அறையை அமைக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
மாநிலங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில், மருத்துவ தயார் நிலைகள், கட்சி மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் உள்பட நிலவரம் குறித்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் தரப்பில் நாள்தோறும் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும் கலந்துரையாட வேண்டும்.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உணவு மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு மாநில அரசிடம் இருந்து சிறப்பு அனுமதிகளை பெற்றுக்கொண்டு சேவையாற்ற வேண்டும்.
இந்த கட்டுப்பாட்டு அறை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபாலின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலில் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.