ஹிசார், அரியானா

லகக் கோப்பை 2007 போட்டியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகிந்தர் சர்மா தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்கு பெற்று வருகிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை மறந்திருக்க மாட்டார்கள்.   அந்த போட்டியில் செப்டம்பர் 24 ஆம் தேதி அன்று இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி விளையாடியது.

கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மா வீசியது குறிப்பிடத்தக்கது.  அந்த போட்டியில் அந்த கடைசி ஓவரில் பாகிஸ்தானின் கடைசி விக்கட்டை ஜோகிந்தர் வீழ்த்தி உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தார்.  அப்போது அவரை உலகக் கோப்பை நட்சத்திரம் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.

உலகக் கோப்பை நட்சத்திரமான ஜோகிந்தர் சர்மா தற்போது கோரோனா எதிர்ப்பு போராளியாக உருவெடுத்து கதாநாயகனாக புகழப்படுகிறார்.   ஆம்.  காவல்துறை சூப்பிரண்டாக பணியாற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு ரோந்து நடத்தி வரும் செய்தி டிவிட்டரில் பரவி அனைவரும் ஜோகிந்தருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தற்போது 36 வயதாகும் ஜோகிந்தர் சர்மா டிவிட்டரில், “இப்போது நாட்டுக்காக ஓய்வின்றி பணி புரியும் நேரம் ஆகும்.   நாம்மட்டும் அல்ல அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.  நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போரிடுவதுதான் உண்மையான நாட்டுப்பற்றாகும்” எனப் பதிந்துள்ளார்.

இதையொட்டி  ஜோகிந்தர் சர்மாவை மிகவும் புகழ்ந்து ஐசிசி பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.