2024 பொது தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் செயல்பட்டு வரும் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் கூட்டம் காங்கிரஸ் கட்சி தலைமையில் பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
பாட்னா-வில் நடைபெற்ற முதல் கூட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பெங்களூரில் நேற்று துவங்கிய இந்த இரண்டு நாள் கூட்டத்தில் 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஒன்றிணைந்து போட்டியிட்ட கட்சிகளுடன் பாஜக-வை எதிர்க்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் ஆம் ஆத்மி உள்ளிட்ட வேறு சில கட்சிகளும் இந்த கூட்டணியில் இணைந்துள்ளதை அடுத்து கூட்டணிக்கு புதிய பெயர் வைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இன்றைய இரண்டாவது நாள் கூட்டத்தில் இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட உள்ளது அதற்காக நான்கு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை இந்த கூட்டணிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.