டில்லி
தற்போது டில்லியில் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனையில் ஈ9டுபட்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணி முதல் டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், தேசிய பொதுச் செயலர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டம் தொடங்கியவுடன் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, :நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்குப் புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இதற்கான பணி வரும் நவ.1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். இந்த உறுப்பினர் தேர்ச்சி என்பது ஒவ்வொரு கிராமங்கள் தோறும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய தொடக்க உரையின்போது மத்திய அரசைக் கடுமையாகச் சாடியிருக்கும் சோனியா காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் கொடுஞ்செயல் பிரச்சாரத்தை நாம் கருத்தியல் ரீதியாக எதிர்த்துப் போராட வேண்டுமெனவும் அதே நேரத்தில் கட்சியின் தலைமை சார்பில் வெளியிடக்கூடிய அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்கள் வாரியாக கொண்டு செல்ல வேண்டுமென்பது நம்முடைய முதன்மையான பணி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட கே.எஸ். அழகிரி தற்போதைய சூழல் குறித்தும் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்தும் சோனியா காந்திக்கு விளக்கமளித்துள்ளார்.