டெல்லி:
மத்தியஅரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையிலும், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது, என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 22ந்தேதி நள்ளிரவுமுதல் ஏப்ரல் 14ந்தேதி வரை இந்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அனைத்து மாநிலங்கள் உள்பட அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியும் வரவேற்று உள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட 21 நாள் ஊரடங்கு உத்தரவு “வரவேற்புக்குரிய நடவடிக்கை”, என்றும் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி “அரசாங்கத்தை ஆதரிக்கும்” என்று தெரிவித்து உள்ளார்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பரவுவது கடுமையான பொது சுகாதார கவலைகள், வேதனைகள் மற்றும் அச்சங்களை நம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுநோயைத் தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தில் முழு தேசமும் ஒற்றுமையுடன் நிற்கிறது என்றும் அதில் கூறி உள்ளார்.