டில்லி

நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு பெருகி வருகிறது.   நாடெங்கும் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களில் காவல்துறையினர் தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறது.    உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும் கர்நாடகாவில் இருவரும் மரணமடைந்துள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “நாடெங்கும் உள்ள மக்கள்  குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு குடியுரிமை சட்டம் தொடர்பான மக்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. அத்துடன் அவர்கள் மீது காவல்துறையை விட்டு அடக்குமுறையைக் கையாள்கிறது

ஜனநாயக ஆட்சியில் இதை ஏற்க முடியாது.   நாங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டத்துக்கு காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.  மக்களுக்கு  அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட உரிமை உள்ளது.  அத்துடன்  சட்டம் தொடர்பான தங்களது கவலைகளைப் பதிவு செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது” எனக் கூறி உள்ளார்.