டில்லி

நாட்டின் பொது சொத்துகளைப் பிரதமர் மோடி விற்பதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மண்டபத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற கூட்டம் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.   இதில் ராகுல் காந்தி மற்றும் இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  அப்போது காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உறுப்பினர்களிடையே உரையாற்றினார்.

சோனியா காந்தி தனது உரையில், “குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 12 மாநிலங்களவை உறுப்பினர் இடைக்கால நீக்கம் செய்தது அரசியலமைப்பு மற்றும் மாநிலங்களவை நடத்தை விதிகளை மீறிய செயலாகும்.   மல்லிகார்ஜுன கார்கே இது குறித்து மாநிலங்களவை தலைவருக்குக் கடிதம் எழுதி உள்ளார்.   இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

துணை ராணுவப்படை 14 பொதுமக்களை நாகாலாந்தில் சுட்டுக் கொன்றது வேதனை அளிக்கிறது.    மக்களவையில் இது குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்தும்.  வேளான் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றும் இதுவரை விவாதம் நடக்கவில்லை.   இந்த 12 மாதங்களில் 700 விவசாயிகள் செய்த உயிர் தியாகத்தை நினைவில் கொண்டு விவசாயிகளின் அனைத்து கோரிக்கையையும் மத்திய அரசு நிறைவேற்ற முன் வர வேண்டும்.

மோடி அரசு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே, விமான நிலயங்கள் என பல விலைமதிப்பற்ற தேசிய சொத்துக்களை விற்று பேரழிவு பயணத்தில் செல்கிறது.  கடந்த 201 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தை அழித்த மோடி இந்த பயணத்தை மேலும் தொடர்ந்து இதைப் பணமாக்கும் முயற்சி எனக் கூறுகிறார்.   மோடி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதாக கூறுகிறார்.   ஆனால் அவர் யாருக்காக இதை மேற்கொள்கிறார் என்பதே கேள்வி” எனத் தெரிவித்துள்ளார்.