டில்லி

ரப்போகும் குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி, சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்தினர்.

குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.   பல ஆண்டுகளாக மோடியிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.   ஆனால் சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலின் போது முக்கிய தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வாகேலா தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் கட்சியை விட்டு விலகியது பெரும் பின்னடைவை கொடுத்தது.

இந்நிலையில் குஜராத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் சந்தித்து பேசினார்.   துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.  இந்த சந்திப்பில் குஜராத் மாநில காங்கிரஸ் எம் எல் ஏக்களும், எம் பிக்களும் கலந்துக் கொண்டனர்.  அவர்களுடன் குஜராத் மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் அசோக் கெஹ்லாத், மற்றும் அகமது படேல் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பு நன்கு நடந்ததாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து, குஜராத் எம் எல் ஏ சக்திசிங் கோஹில், “சோனியா, ராகுல் இருவரும் அகமது படேலை வெற்றி அடையச் செய்ததற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.  இது உண்மைக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி எனக் கூறினர்.  நாம் குஜராத் தேர்தலில் பதவிக்காகவோ ஆட்சிக்காகவோ போட்டியிடவில்லை.  மகாத்மா காந்தியின் கொள்கையை நிலைநிறுத்தவே போட்டியிடப் போகிறோம்.  கடந்த ராஜ்யசபை தேர்தலில் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் வாக்களித்தது போல் வரும் சட்டசபை தேர்தலிலும் அனைவரும் ஒற்றுமையாக காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபட வேண்டும்,  இந்த தேர்தலில் நாம் பெறப்போகும் வெற்றி நமது ஒற்றுமைக்கும், மகாத்மாவின் கொள்கைக்கும் கிடைக்கப்போகும் வெற்றி என தெரிவித்தனர்” என கூறி உள்ளார்.