டில்லி

அயோத்தி ராமர் கோவில்  கும்பாபிஷேக அழைப்பைக் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன  கார்கே உள்ளிட்டோர் நிராகரித்துள்ளனர்.

வரும் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. உத்தரப் பிரதேச மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. விழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல்வேறு கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வக்கையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘பகவான் ராமரை லட்சக்கணக்கானவர்கள் வழிபாடு செய்கின்றனர். மதம் என்பது தனிப்பட்ட விவகாரம், அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அரசு நீண்ட காலமாக தங்கள் அரசியல் திட்டம் ஆக்கிவிட்டது. அயோத்தியில் இன்னும் முழுமையாகக் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படாத கோவிலை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். 

கடந்த 2019 ச்ச்ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு, ராமரை வணங்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை மரியாதையுடன் நிராகரித்துள்ளனர்.’ 

எனத் தெரிவித்துள்ளார்.