கொரோனா பாதித்த  தாயார் பிழைத்தார்… மகன் இறந்தார்..

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு நிற்கும் நிலையில், அங்குள்ள போலீஸ்காரர்களும் பெரும் அளவில் உயிர் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

இதுவரை அந்த மாநிலத்தில் 35 போலீசார் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மேலும்  1908 போலீசார் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூழலில் இந்த எண்ணிக்கை ஓரிரு நாட்களில் 2 ஆயிரத்தைத் தாண்டி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள மேகாவாதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சந்தோஷ் என்பவர் காவல் நிலையத்துக்கு , அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அவரது தாயாருக்குக் கடந்த மாதம் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால், அவரை ஒர்லி என்ற இடத்தில் கொரோனா பாதுகாப்பு மையத்தில் அனுமதித்தனர்.

சந்தோஷூம் ,அவரது மனைவியும் மகனும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 7 ஆம் தேதி சந்தோஷுக்கு காய்ச்சல் இருந்ததால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் நேற்று அவர் உயிர் இழந்தார்.

சந்தோஷின் தாயார், கொரோனாவில் இருந்து விடுபட்டு சில தினங்களுக்கு முன்புதான் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.