ஆன்டிகுவா: இக்கட்டான நேரத்தில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற டேரன் பிராவோ, கீமோ பால் மற்றும் ஹெட்மேயர் ஆகியோர் மறுத்துவிட்டனர்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் ஜுலை 8ம் தேதி துவங்கவுள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் உள்ளது.
பலி எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் உள்ளது. எனவே, மிக விரைவில் அங்கே டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து செல்லக்கூடிய 14 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிடில் ஆர்டருக்காக நிருமா போனர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் செமர் ஹோல்டர் ஆகியோர் புதுமுகங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், டேரன் பிராவோ, ஹெட்மேயர் மற்றும் கீமோ பால் ஆகியோர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெற மறுத்துவிட்டனர்.
அதேசமயம், இந்த வீரர்களின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும், எதிர்கால அணித் தேர்வு நடவடிக்கைகளின்போது குறிப்பிட்ட வீரர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் அனுமதி கிடைத்தவுடன் போட்டித் தொடர் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.