கோயம்புத்தூர்:  தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர், ஆனால், தமிழ்நாட்டில் 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன  கோவை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்  கூறினார்.

கோவை தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு  நேற்று  (நவ.25) நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த மாநாட்டில் 43,844 கோடி முதலீட்டில், 1,00,709 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 158 புதிய தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ” இங்கு வந்திருக்கும் முதலீட்டாளர்களான நீங்கள், மற்றுமொரு மாநிலத்திற்கு வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையான உழைப்பை செலுத்தி, ஏராளமான முதலீட்டாளர்களின் தொழில் நம்பிக்கையை பெற்று, இந்தியாவில் அதிகமான 11.9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருக்கும் தமிழகத்திற்கு வந்திருக்கின்றீர்கள்.

1971ல் சிப்காட் துவங்கியதால்தான், உலகமயமாக்கல் வந்தபோது, அந்த வாய்ப்புகளை தமிழகம் சரியாக பயன்படுத்திக் கொண்டது. கம்ப்யூட்டர் எதிர்காலம் என்பதை பாடத் திட்டத்தில் சேர்த்தோம். டைடல் பார்க் கொண்டு வந்தோம். இதனால்தான் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது. எத்தனையோ மாநிலங்களில், எத்தனையோ அரசுகள் இருக்கின்றன. அவரவர் மாநிலம் வளர வேண்டும் என முதலீட்டாளர் மாநாடு நடத்துகின்றனர், புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகின்றனர். அதில் எத்தனை ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றது?

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை 80% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறுவனங்களாக மாறுகின்றன. 1016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நிலம் வாங்குவது, கட்டுமானம் துவங்குவது என 809 திட்டங்கள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றன. இது மட்டுமின்றி, புதிய யோசனைகளுடன் தொழில் துவங்க இளைஞர்கள் முன் வந்தாலும் அவர்களுக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கிறது. சிறிய நகரங்களுக்கு கூட சென்று ‘ஸ்டார்ட் அப்’ மூலம் இளைஞர்களை தொழில் துவங்க ஊக்குவிக்கின்றோம். இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எண்ணிக்கை 12,664 ஆக உயர்ந்துள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “இந்த அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதால்தான் இத்தனை நிறுவனங்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றன. இங்கு திறன்மிக்க படித்த இளைஞர்கள் இருக்கின்றனர். தொழிலுக்காண சூழல் இருக்கின்றது, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் அரசியல் காரணத்திற்காக, தவறான புள்ளி விபரங்களை பரப்புகின்றனர். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 62,413 நிறுவனங்கள் இருந்தன. இப்போது 7,09,180 நிறுவனங்கள் உள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 29 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் PF பெறுவதாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இதைவிட தமிழகம் தொழிலில் வளர்ச்சி அடைந்திருப்பதற்கு வேறு புள்ளி விவரங்கள் தேவையா?

தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் வெளிமாநிலத்திற்கு செல்வதாக சிலர் செய்திகளை உருவாக்குகின்றனர். 4.5 ஆண்டுகளில், தமிழக முதலீட்டை பார்த்து சிலரால் பொறுக்க முடியவில்லை. தொழில் முதலீடு கொண்டு வருவது எளிதானது அல்ல, பலத்த போட்டிகள் இருக்கும். எந்த மாதிரியான முதலீடு? எத்தனை கோடி முதலீடு? என்பதை விட, வேலைவாய்ப்புக்கு உகந்ததா? என பார்த்து செயல்படுகின்றோம். முதலீட்டாளர் கேட்கின்ற சலுகைகளையும், அந்த முதலீட்டால் தமிழகத்திற்கு ஏற்படும் பலன்களையும் வைத்துத்தான் முடிவு செய்கின்றோம். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட நிறுவனங்கள் விரைவில் அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்குவார்கள் என நம்புவோம். மொத்த முதலீட்டில் உள்ளூர் முதலீடு என்பது இந்த மாநாட்டில் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் திட்டங்களுக்கு எந்த வித தாமதமும், இடையூறும் இருக்காது. ஒரு டிரில்லியன் இலக்கை நோக்கி இந்த ஆட்சி விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதலீடு செய்தால், தொழில் பல மடங்கு வளரும்.”

இவ்வாறு கூறினார்.