இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், 3 போட்டிகளை வென்ற இந்திய அணி, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இத்தொடரின் முதல் 3 போட்டிகளில், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வென்றது. ஆனால், கடைசி 2 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணியே வென்றது.
இத்தொடரைப் பொறுத்தவரை, இந்திய முகாம் சற்று தடுமாற்றத்துடனேயே காணப்பட்டது. யாருக்கு வாய்ப்பளிப்பது மற்றும் எந்த இடத்தில் யாரை களமிறக்குவது என்பன போன்ற குழப்பங்கள் இருந்தன.
முதல் போட்டியையும், மூன்றாவது போட்டியையும் இங்கிலாந்து அணி வென்றபோது, இத்தொடரை இந்திய அணி வெல்வது சந்தேகம் என்ற நிலையே காணப்பட்டது.
ஆனால், நான்காவது போட்டியில், இந்திய பெளலர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அதேசமயம், ஐந்தாவது போட்டியில், இந்திய பேட்ஸ்மென்கள் வேறு லெவல் திட்டத்துடன் ஆடவந்ததை உணர்த்தினார்கள்.
ரொம்ப சிரமப்படாமல், முதல் 4 பேட்ஸ்மென்கள் இங்கிலாந்து அணியால் தொட முடியாத ரன்களை செட் செய்தார்கள் எளிதாக. முடிவில், சமீபத்திய டெஸ்ட் தொடர்களில் தனது மன தைரியத்தை வலுப்படுத்திக் கொண்ட இந்திய அணி, டி-20 தொடரிலும் அதை தகுந்த நேரத்தில் வெளிப்படுத்தி தொடரை வென்றுள்ளனர்.
இத்தொடரில், கேப்டன் விராத் கோலி மொத்தம் 3 அரைசதங்கள் அடித்து, அந்த மூன்றிலுமே நாட்அவுட் என்ற சாதனையைப் புரிந்துள்ளார்.