புதுடெல்லி:
சில நாடுகள் இன்னும் இந்தியர்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவில்லை, அவர்கள் அனுமதித்தால் பயணிகளை கொண்டு செல்ல தயாராக உள்ளோம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

இதுகுறித்து ஹர்தீப் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மே மாதம் 6ஆம் தேதி முதல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றோம்.இருப்பினும், கரோனா தொற்று காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் இந்திய நாட்டினர் நுழைவதற்கான கட்டுப்பாடுகளை இன்னும் நீக்கவில்லை. அக்டோபர் 22 ம் தேதி, கேரளம் மற்றும் பஹ்ரைன் இடையே இயங்கும் சிறப்பு விமானங்களின் சராசரி கட்டணம் ரூ .30 ஆயிரம் முதல் ரூ.39 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் வளைகுடா நாடுகள், வாரத்திற்கு 750 பயணிகளை மட்டுமே இந்தியாவில் இருந்து வர அனுமதிக்கிறது.இந்த நாடுகளுக்கு பயணிகள் வர கட்டுப்பாடுகளை எளிதாக்கினால் அதிக பயணிகளுடன் பறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.இருப்பினும், சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஜூலை முதல் வெளிநாடுகளுக்கு இயங்கி வருகின்றன.கரோனா வைரஸ் தொற்றுநோயால் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு மே 25 அன்று இந்தியா தனது உள்நாட்டு பயணிகள் விமானங்களைத் இயக்கத் தொடங்கியது.