மும்பை: வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கும் பணம் போடுவதற்கும், வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையை சில வங்கிகள் கொண்டுவந்துள்ளன.

இந்த ஆண்டு முடிவதற்கு, இன்னும் 2 மாதங்களே இருக்கும் நிலையில், இத்தகைய அதிர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நவம்பர் மாதம் 1ம் தேதியிலிருந்தே அந்த புதிய விதிமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிகளுள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுள் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, ஒரு மாதத்தில், 3 தடவைகள் மட்டுமே ஒருவர் இலவசமாக, தனது சொந்தப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். அதற்குமேலான, பணமெடுத்தல் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.150 செலுத்த வேண்டும்.

அதேபோன்று, வங்கியில், மாதம் ஒன்றுக்கு 3 தடவைகள் மட்டுமே கட்டணமின்றி பணம் போட முடியும். அதற்குமேல், பணம் போடுவதற்கு ஒவ்வொரு தடவையும் ரூ.40 கூடுதல் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, சில விலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள், 3 முறைக்குமேல் பணம் எடுத்தால் ரூ.100 மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கும் எந்த சலுகையும் இதில் வழங்கப்படவில்லை.

இந்தப் புதிய கட்டண நடைமுறையை கொண்டுவர, எந்தெந்த தனியார் வங்கிகள் முடிவுசெய்துள்ளன என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.