டெல்லி: அவசியம் இருப்பின் குடியுரிமை சட்ட திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின்னர் அமலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அதற்கு வட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட அமித் ஷா, அவசியம் இருப்பின் குடியுரிமை சட்ட திருத்தங்கள் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றார்.
அவர் மேலும் பேசியதாவது: மேகாலயா மாநில முதலமைச்சர் கோன்ராட் சங்மா, அமைச்சர்கள் என்னை சந்தித்தனர். அவர்கள் இந்த பிரச்னையை பற்றி என்னிடம் பேசினர்.
சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு பிறகு என்னை சந்திக்குமாறு அறிவுறுத்தினேன். இது குறித்து அம்மாநில மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று தெரிவித்ததாக கூறினார்.