ஐதராபாத்,

ந்திர மாநில சட்டசபையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செல்வதால் ஒரேநாளில் 100 எம்எல்ஏக்களுக்கு மாஸ் லீவ் வழங்கப்பட்டது.

ஆந்திராவில் தற்போது   சட்டசபை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்காக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 100 எம்எல்ஏக்களுக்கு ஒரே நேரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 100 எம்எல்ஏக்கள் சபாநாயகர் கொடெல்லா சிவபிராசாத் ராவிற்கு எழுதியுள்ள விடுமுறை கடிதத்தில்,   வார விடுமுறையோடு சேர்த்து கூடுதலாக இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

தற்போது கார்திகை மாதம் நடைபெற்று வருவதால், இந்த மாதம் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தற்போதுள்ள முகூர்த்த நாளில், 1.2 லட்சம் திருமணங்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக எம்எல்ஏக்கள் பல்வேறு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய திருப்பதால், சட்டசபை நடவடிக்கைகளில் ஈடுபட விடுமுறை கேட்டு சபாநாயகரிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.

வரும் 30ந்தேதியுடன் சட்டமன்ற கூட்டம் முடிவடைய இருப்பதால், எம்எல்ஏக்கள் மொத்தமாக விடுமுறை கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய ஆந்திர சட்டசபையில் 176 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 67 பேர் ஒய்எஸ்ஆர் காங்கிரசை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தைதொடர் முழுவதையும் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

தற்போது ஆளுங்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 100 பேர் விடுமுறை எடுத்திருப்பதும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டிலேயே அதிக சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபை உறுப்பினர்கள் தான்.இவர்களின் மாத சம்பளம் 1.25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.