கோழிக்கோடு:

யநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து, கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் முறைகேடு புகழ் சரிதா நாயர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

வயநாட்டில் ராகுலுக்கு எதிராக  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி போட்டியிடுகிறார். மேலும், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீர் போட்டியிடுகிறார். அத்துடன், சரிதாநாயர் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்து உள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த 2013ம் ஆண்டு உம்மன்சாட்டி ஆட்சியின்போது,  தனியார் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு சோலார் பேனல்கள் விற்பனை செய்ததில், தொழிலதிபர் சரிதா நாயர் மோசடி செய்ததாக   குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் புகார் எழுந்தது. காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் பலன் பெற்றதாக கூறப்பட்டது.  அதுபோல, கேரள முதல்வராக இருந்த  உம்மன் சாண்டி அரசு பங்களாவில் வைத்தும், எம்.பி. வேணுகோபால் மாநில அமைச்சரான ஏ.பி. அனில் குமார் இல்லத்தில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்  புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் சரிதா நாயர்.

இந்த நிலையில், தற்போது வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக சோலார் புகழ் தொழிலதிபர்  சரிதா நாயர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள சரிதாநாயர், வயநாடு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராகுலை எதிர்த்து போட்டியிடவில்லை. ராகுலை எதிர்த்து போட்டியிடுவதால் நல்ல விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், பாலியல் லீலை களை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு என்பதால் போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளார்.