சென்னை: தமிழ்நாடில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை ரூ.3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
செஞ்சி சிங்கவரம் ரங்கநாதர் கோயில் மற்றும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களில் அமைச்சர்கள் சேகர் பாபு, மஸ்தான் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மலைப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாதர் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தரும் இந்த கோயிலில் மாற்று திறனாளிகள், வயதானவர்கள் படி ஏற முடியாததால் மாலை பாதை அமைக்கவும், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து, 3கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகளை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்களை புனரமைத்து, குடமுழுக்கு நடத்துவதற் கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது. மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் ரூபாய் 80 லட்சம் செலவில் திருப்பணி செய்து, குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் திருத்தேர் செய்யவும், ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் கோயில் குளத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள ஆயிரம் கோவில்களை புணரமைக்க ரூ. 1,500 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 100 கோடி செலவில் 80 கோவில்கள் புனரமைக்கப்பட்டு, நிகழாண்டிலேயே குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டில் ரூ. 3,000 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட கலெக்டர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.