சென்னை: தமிழகத்தில் இதுவரை (டிசம்பர் 2ந்தேதி இரவு) 94% எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்கள் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே முதல்கட்டமாக பீகாரில் நடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் தோ்தல் ஆணையம் எஸ்ஐஆர் பணிகளை மேற்கண்டு வருகிறது.
இந்த பணிகள் கடந்த நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது. டிச.4-ஆம் தேதி நிறைவடைய வேண்டிய நிலையில், மழை மற்றும் பல்வேளுற காரணங்களால், இதற்கான பணிகள் டிச. 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2ந்தேதி) இரவு வரை நிரப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள் எவ்வளவு என்பதை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
அதன்படி, தமிழகத்தில் 94.32 சதவீதம் (6,0474,835 வாக்காளா்கள்) எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 6,41,14,587 வாக்காளா்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) மாலை 3 மணி நிலவரப்படி 6,37,59,445 (99.45%) வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 6,04,74,835 (94.32%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் விநியோகிக்கப்பட்ட 10,17,987 (99.65) கணக்கீட்டு படிவங்களில் 9,78,177 (95.75%) படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவில் 100 சதவீதம், ராஜஸ்தானில் 98.54 சதவீதம், கோவாவில் 98.28 சதவீதம், மேற்கு வங்கத்தில் 97.34 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 95.69 சதவீதம், சத்தீஸ்கரில் 94.56 சதவீதம், அந்தமான்-நிகோபாரில் 93.83 சதவீதம், குஜராத்தில் 91.45 சதவீதம், கேரளத்தில் 88 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 79 சதவீதம் கணக்கீட்டுப் படிவங்கள் பதவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.