சென்னை: தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதுவரை (கடந்த 9 நாட்களில்) 78.09% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு ஊழியர்களுடன், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அப்போது, இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையைத் தொடர்ந்து, எஸ்ஐஆர்-ஐ கண்டு ஏன் இவ்வளவு பயப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துள்ளதடன், பணிகளை தொடர தேர்தல் ஆணையத்துக்கு பச்சைக்கொடி காட்டி விட்டது. மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நடவடிக்கை புஷ்வானமாகி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை (நவம்பர் 12) சுமார் 78.09% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 5 கோடி எஸ்.ஐ.ஆர் படிவங்கள் அதாவது சுமார் 78.09% விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எஸ்.ஐ.ஆர் பணியில் 2 லட்சத்து 1,445 பூத் லெவல் ஏஜெண்டுகள் ஈடுபட்டுள்ளார்கள்’ எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்கள் கணக்கீடு செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.