சென்னை

செஸ் போட்டிகளைத் தொடங்க சென்னைக்கு நாளை பிரதமர் மோடி வருவதையொட்டி சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் நாளை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான இரண்டு மிகப்பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டு சகல வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது.

முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த செஸ் ஒலிம்பியாட் திருவிழாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் 30 பேரும் அடங்குவர்.

நாளை மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட்டின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியைத் தொடங்கி வைக்கிறார். முதல் நாளில் போட்டிகள் எதுவும் கிடையாது.  ஜூலை 29-தேதியில் இருந்து போட்டிகள் நடைபெறும்.

நாளை செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைப்பதற்காகப் பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் நேற்று இரவு செய்தியாளர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பினர்.

ஆணையர் சங்கர் ஜிவால், ”பிரதமர் மோடியின் சென்னை வருகைக்கு எதிராக என்ன நடைபெற  உள்ளது என்பதற்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுப்போம். பிரதமரின் வருகையையொட்டி சமூகவலைத்தளங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கருத்துக்களைக் கண்காணித்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.