“தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம்” என்று  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைத் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலர் சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர்.

இந்த நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்து துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 48 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி அளித்தார்.

பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்தார்.

இது போராடிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“மக்களைக் கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை  எதிர்ப்புக்கு இடையேயும் இயங்க அனுமதித்தது, 99 நாட்கள் மக்கள் அமைதி வழியில் போராடியபோது அரசு கண்டுகொள்ளாமல் இருந்தது, நூறாவது நாள் மக்கள் ஊர்வலமாக சென்றபோது துப்பாக்கிச்சூடு நடத்தியது என்று அரசு தரப்பில் தவறு நடந்திருக்கும்போது, போராடிய மக்களையே குற்றம் சொல்வது போல இருக்கிறது ரஜினியின் பேச்சு” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.