மதுரை
மத்திய அரசைக் கண்டித்து நீட் தேர்வுக்கு எதிராகப் போராடக் கிளம்பிய நந்தினி மற்றும் அவர் தந்தை ஆனந்தன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவ பருவத்தில் இருந்தே மதுவிலக்குக்கு ஆதரவாகவும் டாஸ்மாக் மூலம் மது விற்கும் தமிழக அரசுக்கும் எதிராக நந்தினி போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. அவருடைய தந்தை ஆனந்தனும் அவருடன் போராட்டம் நடத்தி வருகிறார். இதனால் அவர் மீது ஏராளமான வழக்குகள் பாய்ந்துள்ளன. கடந்த ஆண்டு பிரதமர் இல்லம் முன்பு வாக்கு இயந்திரத்தை எதிர்த்துப் போராட முயன்ற போது இவர் கைது செய்யப்பட்டார்.
எனவே நந்தினி ஒரு திமுக ஆதரவாளர் எனப் பலரும் சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வந்தனர். சமீபத்தில் திமுக ஆட்சியின் போது ஊரடங்கு தளர்வை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கு எதிராக நந்தினி போராடுவாரா எனப் பலரும் கேள்விகள் எழுப்பினர். ஆனால் கடந்த 20 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளைத் திறந்த திமுக அரசுக்காகப் போராட்டம் நடத்தப் போவதாக அவர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்தது. மேலும் அவர் எங்கும் வெளியில் செல்லாமல் தடுக்க வீட்டைச் சுற்றி காவல்துறையினர் அரசால் நிறுத்தப்பட்டனர் இந்நிலையில் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த நந்தினி போராடக் கிளம்பிய போது அவரும் அவர் தந்தை ஆனந்தனும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.