சென்னை: கொரோனா கட்டுப்பாட்டை மீறியவர்களிடம் ரூ.6 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாகவும், மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும்  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. சென்னையிலும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதனால் மார்க்கெட் போன்ற பகுதிகளில் மீண்டும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.  கொரோனா கட்டுப்பாட்டை மீறுபவர்கள் நிறுவனங்கள், மண்டபங்களில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகிறார்கள்

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சென்னை மாநகராட்சி பகுதியில் இந்த மாதிரி விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 7 திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும்,  எழும்பூரில் விதியை மீறி திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதித்த திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றாத தனிநபர்கள், உணவகங்கள், மளிகை கடைகள், இறைச்சி கூடங்கள், நிறுவனங்களிடம் இருந்து இதுவரை ரூ.6 கோடியே 38 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் ஆட்களை அனுமதிப்பது, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது, முகக்கவசம் அணிவது உள்பட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்  இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதுபோல,  பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் தினசரி சராசரியாக 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னையில் கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ள நிலையில் மீண்டும் தொற்று பரவுதலை தடுக்க மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், உதாரணமாக மார்க்கெட், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அரசு அறிவித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு இயங்கும் இதர அங்காடிகள் ஆகிய இடங்களில் பணிபுரியும் நபர்களுக்கு சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

எனவே, கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க மேற்குறிப்பிட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மக்கள் தங்களது முழுஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.