டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் மாநில காவல்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடந்த 7-ந் தேதி அன்று உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பனிப்பாறையில் ஏற்பட்ட தண்ணீரானது பாய்ந்தோடி அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் கலந்தது. இதனால், அந்த ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றின் கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மேலும், அந்த பகுதியில் செயல்பட்டு வந்த 2 நீர் மின் நிலையங்கள் பெருத்த சேதம் அடைந்தன. தபோவன் நீர்மின் நிலைய சுரங்கம், சேறு மற்றும் இடிபாடுகளால் முழுமையாக சூழப்பட்டது. இதனால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 25 முதல் 30 தொழிலாளர்கள் கதி என்ன என்பது தெரியாத நிலை ஏற்பட்டது.
இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை என அனைத்து தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 10-வது நாளாக மீட்பு பணி தொடர்கிறது.
இதுவரை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் 58 பேர்களின் உயிரற்ற உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களில் 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், சுரங்கத்தில் உள்ள சேறுகளை அகற்றும் பணியும், துளையிடும் பணியும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது என காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.