புதுக்கோட்டை:

புதுக்கோட்டை  மாவட்டத்தில் இதுவரை 800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 86  பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒருவர் மட்டுமே மரணம் அடைந்த நிலையில் 38 பேர் நோய் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 48 பேர் சிசிக்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த  இன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியம், வர்த்தக காய்கனி வியாபாரிகள் சங்கம், நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு வணிக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் உமா மகேஸ்வரி, “புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர் களால்தான், இங்கு தொற்று பரவி வருகிறது. . மாவட்டம் முழுவதும் 13 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வெளி மாவட்டங்களிலிருந்து வரும் நபர்கள் பரிசோதனைக்கு பின்பு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்றார்.

மேலும், மாவட்டத்தில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும்,  மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை,  1,200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல், 36 வெண்டிலேட்டர் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 8800 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும்,  தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை செயல்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.