சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த 6ந்தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்ப தாக  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு  பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியான தினமான, கடந்த மே 6-ம் தேதி தொடங்கியது

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்‌. இணைய வசதியில்லாதவர்கள் சிறப்பு சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 01800-425-0110, tneacare@gmail.com மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

இந்த நிலையில், இதுவரை ( 19ந்தேதி மாலை நிலவரம்)  பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்காக 1.73 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதிவு தொடங்கிய  முதல் நாளிலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக  தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 792 மாணவர்கள் நேற்று மாலை 6 மணி வரை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 366 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். 81 ஆயிரத்து 950 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் . கடந்த ஆண்டு 2 லட்சத்து 28 ஆயிரத்து 122 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு இந்த எண்ணிக்கை அதைவிட உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்து உள்ளது.