டில்லி,
வட இந்தியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 78 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
வட இந்தியாவின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. டில்லி போன்ற நகரங்களில் காலை 10 மணிக்குகூட பனிப்பொழிவு காரணமாக விடியாத சூழலே காணப்படுகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவில் கடும் பனிப்பொழிவு நிகழ்கிறது.
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் மூடு பனியின் தாக்கம் தொடர்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மூடு பனி காரணமாக டெல்லியில் 30 ரெயில்களின் பயணநேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 78 ரெயில்களின் சேவையை அடுத்த ஆண்டு ஜனவரி 15 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படு வதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக 78 ரெயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்கள் குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தெரிவிப்பதற்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக ரெயில்கள் புறப்படும் நேரம் மற்றும் சேவை நிறுத்தப்பட்டுள்ள ரெயில்கள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க அந்தந்த ரெயில் நிலையங்களில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ரத்து செய்யப்பட்ட ரெயில்கள் தவிர இயக்கப்படும் ரெயில்களையும் மெதுவாக இயக்கவும் ரெயில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.