ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் ஸ்ரீப்ரியா. அந்த காலகட்டத்தில் ஸ்ரீதேவிக்கு நிகராக, முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.
முக்கிய நாயகர்களான ரஜினியுடன் 30 படங்கள்; கமலுடன் 28 படங்களில் ஜோடியாக நடித்தவர்.
இவர் கடந்த 1988ம் ஆண்டு, நடிகர் ராஜ்குமார் சேதுபதியை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நாகார்ஜுன் என்கிற மகனும், சிநேகா என்கிற மகளும் இருக்கிறார்கள்.
இருவருமே திரைத்துறை ஆர்வம் இன்றி பிற துறைகளில் முத்திரை பதித்துள்ளனர்.
ஸ்ரீப்ரியாவின் மகள் சிநேகா லண்டன் சென்று இளங்கலை மற்றும் முதுகலை சட்டப்படிப்பு படித்தார்.
தற்போது 25 வயது ஆகும் சிநேகாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்தில் முப்பதாண்டுகளாக வசிக்கும் ராஜேஷ் மற்றும் சாதனா தம்பதியின் மகன் அன்மோல் தான் மணமகன். இரட்டை எம்பிஏ படித்த இவர், லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார்.
மணமக்களின் பெற்றோர்கள், “தற்போதைய கொவிட் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், திருமணம் லண்டனில் பதிவு செய்யப்படும். இருப்பினும், ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்படும். சினேகாவும் அன்மோலும் தங்கள் வாழ்க்கை பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் கோருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.
– டி.வி.சோமு