கொச்சி:

கேரளாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்டி ருந்த விவிபாட் இயந்திரத்தினள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் இன்று  3 ஆவது கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது.  கேரள மாநிலம் முழுவதும் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரம் (விவிபாட்) ஆடிக்கொண்டே இருந்துள்ளது. தொடக்கத்தில் இதுகுறித்து யாரும் கண்டுகொள்ளாத நிலையில், வாக்காளர் ஒருவர் தனது வாக்கை சரிபார்க்க விவிபாட் இயந்திரத்தை நோக்கியபோது, அதனுள் பாம்பு இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாக்காளர் பாம்பு பாம்பு என அலற,  வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் வாக்குச்சாவடியை விட்டு தலைதெறிக்க ஓடினர்.

பின்னர், காவல்துறையினர், அந்த விவிபாட் இயந்திரத்தை வெளியே எடுத்து வந்து, அதனுள் இருந்த பாம்பை பிடித்து  காட்டுப்பகுதியில் விட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.

பின்னர் வழக்கம்போல வாக்குப்பதிவு நடைபெற்றது.

கண்ணூர் தொகுதியில், தற்போதைய எம்பி. பி.கே.ஸ்ரீமதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கே.சுரேந்திரனும், பாஜக கூட்டணி சார்பில் பத்மநாபனும் போட்டியிடுகின்றனர்.