டில்லி

த்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி பத்திரிகையாளர்களை கண்காணிக்க புதிய வகை அடையாள அட்டையை அறிமுகம் செய்ய உள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை தற்போது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கி வருகிறது.    இந்த அட்டையை ரேடியோ ஃபிரிக்வென்ஸி அடையாள அட்டை எனப்படும் மின்னணு அடையாள அட்டையாக மாற்றலாம் என அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை துறை அதிகாரி ஃபிரான்க் நோர்ன்ஹா உறுதி செய்துள்ளார்.   அவர், “இவ்வாறு மின்னணு அட்டை வழங்கப் படுவதன் மூலம் பத்திரிகையாளர்கள் அரசு அலுவலகங்களுக்கும் அல்லது முக்கிய விழாக்களுக்கு செல்லும் போது அதற்கான இயந்திரத்தில் தேய்த்தால் போதுமானது.   இதன் மூலம் நேரம் மிச்சப்படும்.” என தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த அட்டை மூலம் பத்திரிகையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்னர்.  ஒரு மின்னணு வல்லுனர்,  ”பத்திரிகையாளர்கள் அரசு கட்டிடங்கள் அல்லது விழாக்களில் செல்லும் போது இந்த அட்டையை தேய்க்கும் போது அவர்கள் மின்னணு முறையில் அந்த இயந்திரத்துடன் இணைக்கப்படுவார்கள் .    இதன் மூலம் அவர்கள் அங்கு நுழைந்த நேரம், வெளியேறும் நேரம் மட்டுமின்றி அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க முடியும்”  என தெரிவித்துள்ளனர்.

இந்த வகை அட்டை வழங்க மிகவும் செலவாகும் என சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இவ்வளவு செலவு செய்து பத்திரிகையாளர்களுக்கு இந்த அட்டை வழங்குவது அவர்களை கண்காணிக்க மட்டுமே பயன் படும் எனவும் அவர்கள் கூறி உள்ளனர்.   ஏற்கனவே பொய் செய்தி அளிப்போரின் உரிமம் பறிக்கப்படும் என ஸ்மிரிதி இரானி அறிவித்ததும்,   அதனால் சர்ச்சை எழுந்ததால் பிரதமர் மோடி அந்த அறிவிப்பை ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.