லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றித்தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிரிதி இரானி பட்டப்படிப்பு முடிக்கவில்லை எனவும், சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் வேட்பு மனுவில் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் வெவ்வேறாக அவரது படிப்பு குறித்து தெரிவித்த தகவல் சர்ச்சையான நிலையில், தற்போது தான் பட்டதாரியே இல்லை என்று உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதல்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்துள்ளது. 2வது கட்ட தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது.
உ.பி. மாநிலத்தில் 5வது கட்ட தேர்தல் 14 தொகுதிகளில் மே 6ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. அங்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் போட்டியிடு கின்றனர். அமேதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி போட்டியிடுகிறார்.
ஸ்மிரிதி இரானி நேற்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவுடன் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், தான் பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்றும், துனது சொத்து மதிப்பு ரூ.4.71 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் ரூ.1.75 கோடி அசையும் சொத்துக்கள் ஆகும். இரானிக்கு ரூ.13.14 லட்சம் மதிப்புள்ள வாகனங்களும், ரூ.21 லட்சம் மதிப்புள்ள நகைகளும் உள்ளன. ரூ.1.45 கோடி மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கியிருக்கும் வீடு ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.2.96 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மிரிதி இரானியின் கணவர் ஜுபின் இரானியின் சொத்து மதிப்பில் ரூ.1.69கோடி அசையும் சொத்துக்கள் எனவும், ரூ.2.97கோடி அசையா சொத்துக்கள் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிரிதி இரானி கடந்த 2004–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மனு தாக்கலின்போது, தான் பி.ஏ. பட்டப்படிப்பை டில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் முடித்ததாக கூறி இருந்தார்.
அதையடுத்து 2011–ம் ஆண்டு டெல்லி மேல்–சபை தேர்தலுக்காக போட்டியிட்டபோது, டில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.காம். படித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
அதைத்தொடர்ந்து 2014–ல் அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்தபோது, தான் டில்லி பல்கலைக்கழகத்தில் திறந்தவெளி கல்வி முறையில் பி.காம். படித்துள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.
ஒரு தடவை பிஏ என்றும் மற்றொரு தடவை பிகாம் என்றும் கூறியதால், அவர் படிப்பு குறித்து சர்ச்சை எழுந்தது. இந்த மூன்று தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலும் 3 விதமாக கூறியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது தான் பட்டப்படிப்பே முடிக்கவில்லை என்று ஒரேயடியாக தெரிவித்து உள்ளார்.