டில்லி

புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியாவில் 1.05 கோடி பேர் பாதிக்கப்பட்டு 1.52 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  எனவே கொரோனா பாதிப்பு பரவ யாருக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வுக் குழு ஒரு கணக்கெடுப்பை நடத்தி உள்ளது.  இந்தக் குழுவின் கீழ் 40 கல்வி நிலையங்கள் பல்வேறு பாடங்களை நடத்தி வருகிறது.

இந்த கல்வி நிலையங்களில் பணி புரிவோர், அவர்கள் குடும்பத்தினர், ஆகியோர் தன்னிச்சையாக இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.  இந்த கணக்கெடுப்பில் கலந்துகொண்ட 10,427 பேரில் 1058 பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆண்டி பாடிகள் தானாகவே உருவாகி இருந்தது தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் மத்திய சுகாதார அமைச்சரவை புகை பிடிப்போருக்கு கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என தெரிவித்திருந்தது.   இதற்குக் காரணம் புகை பிடிப்போர் கைகளில் இருந்து வாய்க்கு கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது.   மேலும் புகையிலையால் மூச்சு தொற்று அதிகரித்து கொரோனாவுக்கு அதிக வாய்ப்பு ஏற்படும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் தற்போதைய ஆய்வின்படி புகைபிடிப்போர் மற்றும் சைவ உணவு சாப்பிடுவோர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உண்டாகும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.   பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவோர்,  வீட்டு வேலை செய்வோர், பாதுகாவலர் பணி புரிவோர் புகை பிடிக்காதோர், அசைவ உணவு சாப்பிடுவோருக்கு கொரோனா தொற்று அபாயம் அதிக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.