சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,  மெரினா கடற்கரையில் உள்ள பழைய கடைகள் அகற்றப்பட்டு, புதிய வகையிலான  ஸ்மார்ட் வண்டி கடைகளை சென்னை மாநகராட்சியை நிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அங்கு கடை வைத்து வாழ்ந்து வரும், வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மெரினா கடற்கரையில் ஏராளமான   சிறு கடைகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமின்றி, பல குற்றச் செயல்களும் அதிகரிதுது வந்தன. மேலும், கடற்கரை அசுத்தப்படுத்தப்பட்டு வந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை வழங்கியது.

அதன்படி, கடற்கரையில் நடத்தப்படும் கடைகளை முறைப்படுத்த அதன் பரப்பு மற்றும் கொள்திறன் அடிப்படையில் 900 கடைகளை மட்டும் அனுமதிக்க உத்தர விட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு ஸ்மார்ட் வண்டி கடைகளை  பயன்படுத்த வேண்டும் மாநகராட்சி அறிவித்தது. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பபட்டது.

அதன்படி, ஏற்கனவே அந்த பகுதியில் கடை வைத்துள்ளவர்களுக்கு 60 சதவிகிதம் கடைகள் ஒதுக்கவும், மற்றவர்களுக்கு 40 சதவிகித கடைகளையும் ஒதுக்க முன்வந்தது.  அதைத்தொடர்ந்து, மெரினாவில் கடை வைக்க விருப்பம் தெரிவித்து 16 ஆயிரத்து 178 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான தேர்வு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிக்கிம் மாநில முன்னாள் தலைமை நீதிபதி சதீஷ் அக்னிஹோத்ரி பயனாளிகளை தோவு செய்தாா்.

ஆனால், இதை ஏற்க மறுத்த வியாபாரிகள்,   ஏற்கெனவே வியாபாரம் செய்த அனைவருக்கும் கடை ஒதுக்கக் கோரியும், குலுக்கல் முறையில் வெளியாட்களுக்கு கடை ஒதுக்குவதை கண்டித்தும், மெரீனா கடற்கரையில் கடை வைத்திருப்பவா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இந்தநிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை)  காலை 8 மணியளவில் மாநகராட்சி சார்பில் பழைய கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. முதல் கட்டமாக 50-க்கும் மேற்பட்ட கடைகளை மெரீனா கடற்கரையில் இறக்கி வரிசைப்படுத்திக் கொண்டிருந்தனா்.

இதற்கு அந்த பகுதியில்   கடை வைத்திருப்பவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர்,  அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து கூறிய வியாபாரிகள், புதிதாக வைக்கப்பட்டுள்ள  கடைகளை அப்புறப்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என கூறினா்.