சென்னை:

மிழக அரசு வழங்கும் மானியத்திற்கு சிறு பட்ஜெட் படத்தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக செய்தித்துறை இயக்குனர் தகவல் தெரிவித்து உள்ளார்.

தமிழக அரசு ஆண்டுதோறும் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது.  சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தரமான படங்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது.  நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க வேண்டும். இப்படியான படங்கள் மானியம் கோருவதற்கான தகுதி உள்ளவை. அதை மானியக்குழு பார்த்து மானியம் வழங்கலாமா, வேண்டாமா? என்பதை முடிவு செய்யும்.

அந்த வரிசையில் 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் குறித்து இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று செய்தி தொடர்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளமதாவது,

2015, 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வெளியான படங்கள் அரசு மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த படங்கள் குறைந்தது 90 நிமிடத்திற்கு அதிகமாகவும் அதிகபட்சம் மூன்று மணி நேரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

8 தியேட்டர்கள் முதல் 81 தியேட்டர்கள் வரை வெளியிடப்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்

.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மானியத்திற்கு தகுதியான படங்களை தேர்வு செய்ய ஏற்கனவே தேர்வு குழு ஒன்றை அரசு அமைத்துள்ளதும், மானியத் தொகை 10 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.