சென்னை: தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்து நகர் குடிசைவாழ் மக்களை, வெளியேற்றுவதை எதிர்த்து அம்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக, சிபிஐ(எம்) கட்சி, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி போன்றவை குரல் கொடுத்துள்ளன. பா.ரஞ்சித், இந்நடவடிக்கைக்காக துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதமே, அப்பகுதி மக்கள் பெரும்பாக்கம் பகுதிக்கு குடிபெயருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, இப்பகுதியில் வாழ்ந்த 70% மக்கள், தங்கள் இருப்பிடத்தை காலிசெய்துவிட்டு, சென்னையின் முக்கியப் பகுதியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள பெரும்பாக்கத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 30% பேர்தான் அங்கேயே தங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அப்பகுதிக்கு காவல்துறையினருடன் நுழைந்த அதிகாரிகள், அப்பகுதி மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். பல வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்தனர்.

ஆனால், இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். டஜனுக்கும் மேற்பட்டோர், அருகிலிருந்த கூவம் நதியில் இறங்கி, கழுத்தளவு நீரில் நின்றுகொண்டனர். காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து அகன்றபிறகே அவர்கள் வெளியே வந்தனர்.

இந்த அப்புறப்படுத்தல் நடவடிக்கைக்கு, திரைப்பட இயக்குநர் ரஞ்சித், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை விமர்சித்துள்ளார். மேலும், மநீம கமலஹாசனும், அரசின் நடவடிக்கையை கண்டித்துள்ளார்.

தாங்கள் இப்பகுதியிலிருந்து தொலைதூரத்திற்கு வெளியேற்றப்பட்டால், தங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி போன்றவை பாதிக்கப்படும் என அம்மக்கள் குமுறுகின்றனர்.