அத்தியாயம்.8: – டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி.,

மிழகத்தைப் பொறுத்தவரை, அம்மை (Chicken pox) என்ற வார்த்தை வைரஸ் கிருமிகளால் ஜூரத்துடன் கூடிய.. தோலில் உண்டாகும் பலதரப்பட்ட வியாதிகளுக்கு உபயோகிக்கப்படுகிறது.   இவற்றில் இப்போது சிக்கன் பாக்ஸ் எனும் அம்மை வியாதியைப் பற்றி பார்ப்போம்.  சிக்கனுக்கும் இந்த வியாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிக்கன் பாக்ஸ் அம்மை வேர்செல்லா ஸாஸ்டர் (Varicella Zoster) என்ற கிருமியால் ஏற்படும் தொற்று வியாதியாகும்.  இது பெரும்பாலும் இள வயதினருக்கே ஏற்படும்.   இது காற்று  மூலம் பரவும் வியாதியாகும்.  கொப்புளம் வருவதற்கு சில நாட்கள் முன்னரே அடுத்தவர்களுக்கு பரவ வாய்ப்பு உண்டு.

முதல் நாள் உடல் சோர்வும் , உடல் வலியும் உண்டாகும்.  உடலை யாரேனும் பிடித்து விட்டால் நன்றாக இருக்குமே என்ற  உணர்வு ஏற்படும்.  மறுநாள் ஜூரம் ஆரம்பிக்கும்.  தொண்டடை வலியும் உண்டாகலாம்.

அடுத்ததாக உடலில்  நீர்க் கொப்புளங்கள் ஏற்படும். முகத்தில் ஆரம்பித்து சடசடவென்று ஓரிரு நாட்களில் உடல் முழுதும் பரவும். கை, கால் பாதங்களில்  பொதுவாக கொப்புளங்கள் ஏற்படாது.

நீர்க் கொப்புளம் ரோஜா மலரின் மேல் உள்ள பனித்துளி போல் காணப்படும். அதாவது நீர்க்கொப்புளங்களைச் சுற்றி, தோல் சிவந்து வட்ட வடிமாக காணப்படும்.

கொப்புளங்கள் அதிகமாக உருவாகும் போது அந்த இடத்தில்அரிப்பு ஏற்படும்.  நிம்மதியாக உறங்க முடியாது.  ஆயிரம் குண்டுசி உடலில் தைத்தது போன்று வலிக்கும்.

தலைவலியும் ஏற்படும்.   எச்சில் விழுங்க சிரமம் ஏற்படும்.

ஓரிரு வாரங்களில் கொப்பளங்கள் சுருங்கி காய்ந்து வடுவாக பதியும்.

சிகிச்சை

சிக்கன் பாக்ஸ் அம்மைக்கு மாத்திரை கிடைக்கின்றது.  இதை அம்மை  என்பதை உணர்ந்தவுடன், மருத்தவரை ஆலோசித்து சாப்பிட வேண்டும். ஆரம்பத்திலேயே மாத்திரை சாப்பிட்டால், முகத்தில் வடு வர வாய்ப்பு குறைவு.

அம்மை ஒரு தொற்று நோய் என்பதால், பாதிக்கப்பட்டவர்  தனி அறையில் இருக்க வேண்டும்.  மெத்தையில் படுக்கலாம்.  நிறைய நீர் குடிக்க வேண்டும்.  இட்லி, குழைந்த சாதம் போன்ற எளிதில் செரிமானமாகக் கூடிய உணவு சாப்பிட வேண்டும்.

துண்டில் நீர் நனைத்து உடல் முழுதும் மெதுவாக ஒற்றி எடுக்கலாம்.  குளிக்கவே கூடாது என்றில்லை.  கொப்புளம் உடையாமல் கவனமாக குளிக்க வேண்டும்.  படுக்கை மற்றும் உடையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அம்மை வந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டுமா என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது.

நிச்சயம் மருத்துரின் ஆலோசனை பெறுங்கள்.

ஏனென்றால் அம்மை (சிக்கன் பாக்ஸ்) பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் அல்ல. ஆனால் இதைவிட மிகவும்  பாதிப்பை ஏற்படுத்தும் பெம்பிகஸ் (pemphigus )  அல்லது பெம்பிகாய்ட் (pemphigoid) போன்ற நோய்களுக்கான அறிகுறிகளும், அம்மை போன்றே இருக்கும்.

ஆகவே நோய் என்னவென்று அறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்.