அத்தியாயம்.7: -டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி.,
இப்போது இளம்வயதிலேயே நிறைய ஆண்களுக்கு முடி உதிர்ந்து வழுக்கையே விழ ஆரம்பித்துவிடுகிறது. கல்யாண மார்க்கெட்டில் அவர்களது செல்வாக்கு குறைந்து விடுகிறது.
இது குறித்து நம்மில் பலருக்கு மனதில் உதிக்கும் கேள்விகளையும் அதற்கான விடைகளையும் பார்ப்போம்.
1 முடி உதிர்வது ஒரு வியாதியா?
இல்லை… 15 வயது முதலேயே எல்லோருக்கும் முன் தலையில் ஆங்கில M வடிவத்திலோ உச்சந்தலையில் O வடிவத்திலோ முடி உதிரவது ஆரம்பிக்கும். இது மெதுவாக அதிகரித்து ஐம்பது வயதில் வழுக்கையாக மாறும். இது ஒவ்வொருவருக்கும் வித்தியாசப்படும்.
2. ஏன் எனக்கு மட்டும்?
ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் (testosterone) என்கிற ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உள்ளது. பெண்களுக்கு இந்த ஹார்மோன் மிகக் குறைவு. எனவே பெண்கள் பலர் முடி பயங்கரமாகக் கொட்டுகிறது என்று புலம்பினாலும் சொட்டையாவதில்லை.
இளவயதிலேயே வழுக்கை விழ காரணம் பாரம்பரியம் (ஜீன் டிசைன்) காரணமாகும்.
அதனால் இதை ஆண்ரோஜெனிடிக் அலோபீசியா (androgenetic alopecia) என் ஆங்கிலத்தில் கூறுவர்.
சிகிச்சை முறைகள் என்ன?
ஏற்கெனவே சொன்னது போல் ஆண்களுக்கான முடி உதிர்தல் இயல்பே. பெரும்பாலானவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை.
ஒருவேளை சிகிச்சை அவசியம் என்றால் தோல் மருத்துவரைத்தான் அணுக வேண்டும். முடி உதிர்வது, வழுக்கை ஆகிய பிரச்சினைகளை தீர்க்க சலுனையோ, பியூட்டி பார்லரையோ அணுகக் கூடாது.
அத்தனை சீக்கிரம் யாருக்கும் சொட்டை விழுந்துவிடாது. சிலருக்கு சிறிய அளவில் முடி உதிர்ந்தாலும் பதறிப்போய் விடுவார்கள். இது ஒருவித மன இயல்பே. இதை ஆங்கிலத்தில் [dysmorphophobia] என்பர். இதற்கு மனரீதியான சிகிச்சை அவசியம்.
எண்ணை தேய்த்தால் முடி வளருமா?
உலகில் கிடைக்கும் எந்தவொரு எண்ணையை தடவினால் முடி வளராது. ஏனென்றால் எண்ணெய் மூலக்கூறு தோலைக் கடந்து முடிவேருக்குச் செல்லாது. அதாவது தலைக்குள் எண்ணைய் இறங்கும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
என்ன சிகிச்சை?
இளம்வயதிலேயே வழுக்கை விழ ஆரம்பித்தால் சிகிச்சையை ஆரம்பத்தி லேயே துவங்கிவிடுவது அவசியம். இவர்களுக்கு மினாக்ஸ்டில் (minoxidil) என்ற மேலே தடவும் மருந்து உகந்ததாகும். இது தோலைக்க கடந்து முடி வேருக்குள் செல்லும். இதில் பலன் தெரிய 6 மாதங்கள் ஆகும். தொடர்ந்து தடவி வந்தால், பலன் தெரியும். இதன் விலை சராசரியாக மாதம் ரூ 500 முதல் 600 ஆகும்.
இன்னொரு மருந்து வாய்வழியாக உட்கொள்ளக் கூடிய பினஸ்ரைடு ஆகும். இதை நீண்டகாலமாக உபயோகப்படுத்துபவர்களில் 1% பேருக்கு ஆண்மை உணர்வு குறைவதற்கான வாய்ப்பு உண்டு. ஆகவே இதைப் தோல் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இதைப் பயன்படுத்த வேண்டும்.
அதிகமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் அறுவைசிகிச்சை மூலமும் தீர்வு காணலாம். அறுவைசிகிச்சைக்கு பின்னும் முடிவளர்வதற்கான மருந்துகளை தொடரவேண்டும்.
முடிவளரவதற்கான சிகிச்சை எதுவாக இருந்தாலும் அது முறையான தோல் மருத்துவரிடமே சிகிச்சை பெறுவது பாதுகாப்பானது ஆகும்.
சிகிச்சைக்கு உங்களிடம் 60, 000 முதல் 70,000 என ஏலம் விட்டால் அவர் மருத்துவராக இருக்க வாய்ப்பு இல்லை. ஏமாந்தால் உங்களிடம் காசைப்பிடுங்கி மொட்டை அடித்து அணுப்பி விடுவார்கள். முடியோடு உங்கள் பர்ஸூம் பத்திரம்.
(தொடரும்)