தொடர்-15

ண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட்டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர்.

ஆனால் மற்றவர்களைவிட கடும் போக்காளர் பெரியார். அத்தகைய போக்குதான் அவருக்கு வெற்றி யளித்தது என்று சொல்வது சரியாகக் கூட இருக்கலாம், ஆனால் அவர் எதிர்பார்க்காத, அல்லது அவர் அலட்டிக்கொள்ளாத எதிர்விளைவு களும் உண்டு. ஆனால் எங்கு துவங்கியவர் எங்கு முடிந்தார் என்பதை முதலில் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

அவர் தன் பொதுவாழ்வினை காங்கிரசிலிருந்துதான் துவக்கி னார், பல்வேறு கசப்பான அனுப வங்களுக்குப் பிறகுதான் வெளியேறுகிறார். அவரைப் பற்றிய தகவல்கள் ஏராளம். அவற்றைத் திருப்பிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் சுருக்கமாகச் சில இங்கே.

காலனீய அரசு இயந்திரத்தில் பிராமணர்கள் கொடிகட்டிப் பறந்தனர் என்பதைப் பார்த்தோம். பிரிட்டிஷாருக்கெதிராக கிளர்ந்தெழுந்த காங்கிரசிலும்தான் ! ஜஸ்டிஸ் கட்சி துவங்கப்பட்டது ஆட்சியாளர்களின் சதியால் அன்று. பிராமணர்களின் அடாவடியால்தான்.

ஆனால் காலனீய அரசு இயந்திரத்தினை முழுமையாகவே ஆக்கிரமித்திருந்த அவர்கள்தான் நாட்டு விடுதலைப் போரிலும் இறங்கினர். பரந்து பட்ட மக்கள் மத்தியில் காங்கிரசிற்கு பெரும் செல்வாக்கு. பெரும் நிலக்கிழார்களாக இருந்த மேட்டுக்குடி நீதிக் கட்சியினர் காங்கிரஸ் பிராமணரல்லாதார் நலன்களுக்கெதிரானது எனக் கரடியாகக் கத்தியும் பயனில்லை. அடிமைத்தளைக்கெதிரான உணர்வுகளே மேலோங்கி நின்றது. ஆனாலும் நீதிக்கட்சியினர் சொல்வதிலும் உண்மை இருக்கிறதோ என மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருந்தனர்.

அந்தக் கட்டத்தில்தான் ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்த

ஈவேராவை காங்கிரசில் இணையுமாறு தூண்டுகிறார் அண்டை மாவட்டமான சேலத்தில் நகராட்சி தலைவராக இருந்த ராஜாஜி.

அவர் ஒரு வித்தியாசமான சனாதனி. காங்கிரஸ் பிராமணர்கள் கட்டுப்பாட்டில் என்ற குற்றச்சாட்டினை பொய்யாக்க வேண்டு மென்பதற்காகவே ராஜாஜி நண்பர் ஈ வே ராவை காங்கிரசுக்குள் இழுக்கிறார். காந்தி தீண்டாமைக்கெதிராய் பேசி வந்த நிலை யில் காங்கிரஸ் வழியே சமூக சீர்திருத்தம் சாத்தியம் என நினைத்து அவரும் சேருகிறார். சிறுவனாக இருக்கும்போதே தம் குடும்பத்தினர் கடைபிடித்த சாதிப் பாகுபாடுகளை உடைத்தவர்.

அவருடைய செயல்பாடுகள் காரணமாக விரைவிலேயே சென்னை ராஜதானி காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் ஆகிவிடுகிறார். பதவிகளெல்லாம் கிடைத்தும், ராஜாஜிக்கு நெருக்கமாயிருந்தும், கட்சியில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து அவரால் அதிகம் செய்யமுடியவில்லை.

சேரன்மாதேவி குருகுலம் பிரச்சினை பற்றிக் கேள்விப்பட்டி ருப்பீர்கள். காங்கிரஸ் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் நன்கொடை பெற்று உருவாக்கப்பட்ட அக் குருகுலத்தில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதுவே பெரியாருக்கு எரிச்சல் மூட்டியது. போதாக்குறைக்கு இரண்டு பிராமண மாண வர்களுக்கு தனியே உணவு பரிமாறப்பட்டது என்ற தகவல் வெளியாக சினந்தெழுந்தார் அவர்.

எல்லோருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் பரிமாறுங்கள், இல்லையெனில் காங்கிரசிடம் பெற்ற நன்கொடையைத் திருப்பிக்கொடுத்துவிடுங்கள் என்றார். நியாயம்தானே.

குருகுலத்தை நடத்தி வந்த வ வே சு அய்யர் புரட்சியாளர்தான் அவராக சனாதனத்தை திணிக்கவில்லை. அவ்விரு மாணவர்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டதின் பேரில் அப்படி ஓர் ஏற்பாடு.

ஆனால் பிரச்சினையானவுடன் அவர் பின் வாங்கியிருக்கவேண்டும். வாங்கிய நன்கொடையையாவது திருப்பிக்கொடுத்திருக்கவேண்டும். அவரோ முரண்டுபிடித்தார். அவருக்கு ஆதரவாக முக்கிய பொறுப்புக்களிலிருந்த பிராமணர்கள்.

பிரச்சினை காந்தி வரை சென்றது. அவரோ வழக்கம்போல் யாருக்கும் அதிகம் வலிக்காமல் ஒரு யோசனையைச் சொன்னார். இந்த இருவரை விட்டுவிடுவோம். இனி அப்படி வேண்டாம் என்றார்.

தீர்வு காணும் முன் வ வே சு அய்யர் இறக்கிறார். பின்னர் குருகுலமே இழுத்து மூடப்படுகிறது.

குருகுலம் பிரச்சினை பின்னணியில் பெரியாரும் சுயமரியாதை கழகத்தை துவங்கியவருமான தஞ்சை ராமநாதனும் காந்தியுடன் சந்தித்து நீண்ட நேரம் வர்ணாசிரம தர்மம் குறித்து விவாதிக் கின்றனர். சாதி அடுக்கு முறை பிராமணரல்லாதார்க்கு எதிராக இருக்கிறது, பிராமண ஆதிக்கத்திற்கு காரணம் அந்த அடுக்குதான், அவ்வடுக்கை தகர்க்காமல் நாட்டில் தலைவிரித்தாடும் சாதி ஏற்றத் தாழ்வுகளுக்கு தீர்வு காண இயலாது என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால் காந்தி அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்வதாயில்லை.

இந்த நேரத்தில்தான் அகில இந்திய நூற்பாளர் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் பெரியார் செய்த பல நியமனங்களை செயலாளர் சந்தானம் ரத்து செய்கிறார்.

பெரியாருக்குத் தெரியாமல் காந்தியை சந்தித்து ஈவேராவின் நியமனங்கள் பிராமணர்களுக்கு அநீதி இழைக்கிறது எனச் சொல்லியே காந்தியின் அனுமதி பெற்று, சந்தானம் ரத்து செய்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தலைவராக இருந்து கூட தன்னால் ஏதும் செய்யமுடியவில்லையே என்ற கோபம் பெரியாருக்கு. காங்கிரஸ் பிராமணர்கள் கட்டுப்பாட்டில்தான், அவர்கள் ஆதிக்கத்திலிருந்து பிராமணரல்லாதோர் விடுதலை பெற காந்தி உதவப்போவதில்லை என்ற எண்ணம் தொடர்ந்து வளர்கிறது.

குருகுலம் பிரச்சினையின்போதுதான் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறாமல் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதில் பொருளில்லை என்று முதன் முறையாகப் பிரகடனம் செய்கிறார் பெரியார்.

சட்ட மேலவைத் தேர்தல்களைப் புறக்கணிப்பது முடிவுக்கு வந்து காங்கிரசின் ஒரு பிரிவினர் துவங்கிய சுயராஜ்ஜியக் கட்சி போட்டியிடலாம் என்ற நிலை உருவானபோது, பிராமணரல்லாதாருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என வலியுறுத்தி பெரியாரும் அவரது சகாக்களும் கொண்டு வந்த தீர்மானம் ஐந்தாவது முறையாக காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் தோற்கடிக்கப்படுகிறது. ராஜாஜிக்கு தன் நண்பர் ஈ வே ரா வோ மற்றவர்களோ காங்கிரசிலிருந்து விலகுவது பிடிக்கவில்லை. அதே நேரம்  அவர் இதர பிராமணர்களையும் பகைத்துக்கொள்ளத் தயாராயில்லை.

அதன் பிறகுதான் இனி நமக்கு இந்த இடம் சரிப்பட்டு வராது என முடிவெடுத்து பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார். அப்போது கூட உடனடியாக அவர் நீதிக் கட்சியில் சேர்ந்துவிடவில்லை. பிராமணரல்லாதாரில் வளமான பிரிவுகளைச் சேர்ந்தவர்களே அக் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருந்தனர்.

அவர்கள் காலனீய அரசுக்கு தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்து இயன்றவரை சலுகைகள் பெற்று வந்தாலும் கூட அவர்கள் பொதுவாக சனாதனிகளாகவே இருந்தனர். சடங்கு சம்பிரதாயங்களை முழுமையாகக் கடைபிடித்தனர்.

அத்தகைய சூழலில்தான் ஒரு பெரும் அரசியல் சூறாவளியாக உருவெடுத்தார் பெரியார்.

(தொடரும்)