நான் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது. நான் உங்களை சிந்திக்க வைக்க மட்டுமே முடியும்.
– சாக்ரடீஸ்.
உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் தழுவி நிற்கும் தோல் பாதுகாப்பு முறைகளையும் தோலில் வரும் வியாதிகளைப் பற்றியும் விரிவாகக் காண்போம்.
தோல் மருத்துவம் என்றால் என்ன?
பிறந்தகுழந்தை முதல் முதியவர் வரை உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள முடி,தோல் மற்றும் நகம் பற்றி உள்ள சிறப்பு மருத்துவம் தோல் மருத்துவம் ஆகும்.முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தோல் மருத்துவரை அணுகலாம்.
தோல் மருத்துவம் மற்ற துறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டது?
தோல் மாறுபாட்டை மருத்துவரும், நோயாளியும் நேரடியாகக் காணலாம்.அதனால் என்ன?`வியாதியை நேரடியாகக் காணும் போது இரத்த பரிசோதனை, ஸ்கேன் போன்ற பரிசோதனைச் செய்ய அவசியம் குறைவு.சிலசமயம் வியாதியை நன்றாக ஆராய்வதற்கு பயாப்சி தேவைப்படலாம்.பயாப்சி என்றால் கேன்சர் பரிசோதனை என பயப்பட வேண்டாம்.
தோல் மருத்துவரிடம் செல்லும் முன் நீங்கள் என்ன செய்ய கூடாது.?
1] வாரப் பத்திரிகை ,இண்டர் நெட் போன்றவற்றை பார்த்து விட்டு நீங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது.சிலர் இண்டர் நெட்டில் படித்தேன்,பக்கத்து வீட்டு ஆண்டி’’சொன்னார்கள் என்று பற்பசை களையும்,பூண்டையும் முகத்தில் தடவி புண் ஆக்கிக் கொண்டு வருகிறார்கள்.’ பின் வரும் கட்டுரைகளில் வியாதிகளைப் பற்றி விவரமாக எழுதினாலும் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெற வேண்டும்.
2] வாட்ஸ் அப்பில் வரும் தகவலைப் பார்த்து விட்டு அதே வியாதி தனக்கு வந்துவிட்டதோ என பதறவேண்டாம். நிறையபேர் நகத்தில் கறுப்புகோடு வந்தால் அது கேன்சர் என அலறி அடித்துக் கொண்டு வாழ்வே மாயமாக வருகிறார்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி புத்தி புகட்டவும் வேண்டியுள்ளது.
3] நீங்களாக மருந்துகடையில் வாங்கி மருந்து தடவக் கூடாது. முகம் வெள்ளையாக வேண்டும் என்று கண்ட மருந்துகளை தடவி, ஒருசிலர் பக்கவிளைவுடன் காலம் தாழ்ந்து மருத்துவரை அணுகுகின்றனர்.
4] தோல் உபாதைக்காக சலூனையோ,அழகு நிலையத்தையோ அணுகுதல் உகந்தது அல்ல.
5] தோலில் போடும் மருந்தானாலும், வாயில் போடும் மருந்தானாலும் மருத்துவர் குறித்த காலம் மட்டுமே சிகிச்சை செய்ய வேண்டும். நீங்களாக அந்த மருந்தை தொடரக்கூடாது.
தோல் மருத்துவர்கள் பெரும்பாலும் க்ளவுஸ் அணிவது இல்லை,பரிசோதிக்க முகம் சுழிப்பதும் இல்லை, அறிவுறை கூறுவதாக நினைத்து அருகில் உள் நோயாளிகளை பயமுறுத்த வேண்டாம்.
தோல் மருத்துவரை அணுகும் போது என்ன செய்ய வேண்டும்?
1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.தோல் வியாதி உடலில் உள்ள வியாதியின் வெளிப்பாடாக இருக்கலாம். பரிசோதனைக் குறிப்பு மற்றும், மாத்திரைகளையும் கொண்டுசெல்ல வேண்டும். அலோபதி இல்லாத பிறசிகிச்சை முறை செய்தால் அவற்றையும் கூற வேண்டும். தோல் மருத்துவர் கொடுக்கும் சீட்டைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலர் சூம்பிப்போன டியூப்பை மட்டும் கொண்டு வருகின்றனர்.
2. நிறைய ஆலோசனை பெறவேண்டுமானால் அதை வீட்டிலேயே குறிப்பு எடுத்து வரலாம்.
ஓ.கே.தானே.. அடுத்த அத்தியாயத்தில் முடி உதிராமல் தடுக்க முடியுமா என்பது குறித்து பார்ப்போம்.
(தொடரும்)