டெல்லி:

சர்வதேச நீதிமன்றத்தின் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியின் பதவிக்காலம் இன்னும் 6 வாரங்களில் முடிவடைகிறது. இந்த பதவிக்கு புதிய நீதிபதி நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதா? அல்லது தல்வீருக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறதா? என்பது குறித்த இறுதி முடிவை எடுக்காமல் பிரதமர் மோடி காலம் தாழ்த்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சர்வதேச நீதிமன்ற அமர்வில் இந்திய நீதிபதி நியமனம் என்பது முக்கியமான விஷயமாகும். சமீபத்தில் கூட இந்திய முன்னாள் கப்பல் படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் தான் கை கொடுத்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.

அமெரிக்காவின் முதன்மை நீதித்துறை அமைப்பான இந்த சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியின் பதவி காலம் சாதாரணமாக 9 ஆண்டுகளாகும். கடந்த 2012ம் ஆண்டு ஜோர்டான் நீதிபதி ராஜினாமா காரணமாக பண்டாரிக்கு அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவி காலம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிகிறது.

இந்த பதவிக்கான வேட்பு மனுவை வரும் ஜூலை 3ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த பதவியில் தற்போதுள்ள பிரான்ஸ், பிரேசில், பிரிட்டன், சோமாலியா நாடுகளின் நீதிபதிகள் போட்டியிட அந்நாட்டு அரசுகள் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இந்த பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்த பெரும்பாலான நாடுகள் விரும்புகின்றன. வரும் நவம்பரில் நியூயார்க் ஐக்கிய நாடுகளின் பொது சபையில் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அரசு நீதிபதி வேட்பாளர் குறித்த இறுதி முடிவை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த பதவியில் இருக்கும் நீதிபதி இந்திய நாட்டின் பிரதிநிதியாக செயல்பட முடியாது என்றாலும், இந்தியாவுக்கு எதிரான பிரச்னை வரும் போது இது உதவி கரமாக இருக்கும்.