சென்னை

சென்னை பெருங்குடியில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் ஆறு பஞ்சலோக சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளன.

சென்னை பெருங்குடியில் உள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் கோயில்.   வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல பூஜைகள் முடிந்த பின் கோவில் நடை சாத்தப்பட்டது.   நேற்று காலை அர்ச்சகர் வந்து கோயிலையும் சன்னதியையும் திறந்த போது சாமி விக்கிரகங்கள் காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.    ஸ்ரீனிவாச பெருமாளின் உற்சவ விக்கிரகம், நரசிம்மர், பத்மாவதி தாயார் உட்பட ஆறு பஞ்சலோக சிலைகள் காணாமல் போய் உள்ளன.  உடனடியாக அர்ச்சர்கர் அறங்காவலரிடம் தெரிவித்தார்.   அவர் ஆலோசனைப்படி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கோயிலுக்கு பாதுகாவலர் இல்லை.   ஆனால் சிசிடிவி காமிராக்கள் உள்ளன.  இந்த காமிரா பதிவுகளையும் ரேகை அடையாளங்களையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.    அத்துடன் வேறு ஏதும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளனவா எனவும் பார்த்து வருகின்றனர்.

”சென்ற வருடத்தில் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்களில் விக்கிரகங்கள் திருட்டு நடந்துள்ளன.  தஞ்சை அருகே உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் இந்த மாதத்தில் அம்மன் சிலையை திருட முயன்ற மூவர் போலிசால் கைது செய்யப்பட்டனர்.   இதற்கு முன்னரும் இது போல பல சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாட்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.   நடுவில் குறைந்திருந்த சிலை திருட்டு தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது”  என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.