மும்பை

காராஷ்டிர சட்டப்பேரவை மேலவை நியமன உறுப்பினராக நடிகை ஊர்மிளா மடோன்கரை சிவசேனா தேர்வு செய்துள்ளது.

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை மேலவையில் 12 நியமன உறுப்பினர்கள் இடம் காலி ஆகி உள்ளது.  இந்த இடங்களுக்கு அரசு சிபாரிசு செய்யும் நபர்களை ஆளுநர் நியமனம் செய்வார்.  அவ்வகையில் மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணிக் கட்சிகள் அம்மாநில முதல்வர் 12 பேரைத் தேர்வு செய்து அனுப்ப ஒப்புதல் அளித்தது.

அந்த ஒப்புதலின் அடிப்படையில் முதல்வர் 12 பேரைத் தேர்வு செய்து அனுப்ப உள்ளார்.  அதில் சிவசேனாவின் சார்பில் நடிகை ஊர்மிளா மடோன்கர் பெயர் இடம் பெற்றுள்ளது.   ஊர்மிளா கடந்த வருட மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வடக்கு மும்பை தொகுதியில் போட்டி இட்டு பாஜகவின்  கோபால் ஷெட்டியிடம் தோல்வி அடைந்தார்.

அதன் பிறகு 5 மாதம் கழித்து ஊர்மிளா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.  அப்போது அவர் கட்சியின் உள் அரசியல் காரணமாக தன்னால் தனது அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளைச் சுதந்திரமாகச் செய்ய முடிவில்லை ந தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் சிவசேனாவின் சார்பில் அவரை தேர்வு செய்துள்ளது வியப்பை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து சிவசேனாவின் சஞ்சய் ரவுத், “காங்கிரஸ் கட்சியில் இருந்து ஊர்மிளா கடந்த வருடமே விலகி விட்டார்.  எனக்குத் தெரிந்த வரை அவருக்குக் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரச்சினை இருப்பதால் அவர் கட்சியில் இருந்து விலகியதாகத் தோன்றுகிறது.” என தெரிவித்துள்ளார்.

சிவசேனா ஊர்மிளாவைத் தேர்வு செய்தது குறித்து காங்கிரஸ் கருத்து கூற மறுத்துள்ளது.  விரைவில் ஊர்மிளா சிவசேனாவின் செய்தி தொடர்பாளராக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.