சென்னை:
திரைத்துறையில் தனிப்பட்ட ஒழுக்கத்துக்கு பெயர் போனவர் நடிகர் சிவக்குமார். சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, யோகா, நெறியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் இவர் என்றும் இளமையோடு, மார்க்கண்டேயன் என்று பெயர் எடுத்தவர்.
கடந்த (2017ம்) வருடம் அக்டோபர் மாதம், ‘சகலகலா வல்லபன்’ என்ற புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட இவர், “சினிமாவில் இருப்பவர்கள் மது, புகை, மாதுக்கு அடிமையாகக் கூடாது” என்று நெகிழ்ச்சியுடன் பேசியதை இப்போதும் நினைவுகூர வேண்டியிருக்கிறது.
அந்த விழாவில் சிவகுமார் பேசுகையில், “எஸ்எஸ் வாசன், எம்ஜிஆர், சிவாஜி போன்ற மேதைகளின் ஆரம்ப கால வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள உதவியது பேசும் படம் என்ற பத்திரிகை. அந்தப் பத்திரிகையில்தான் எம்ஜி வல்லபன் பணியாற்றினார். அப்போதெல்லாம் நான் சிரமப்பட்ட காலகட்டம். அப்போது இரண்டு வெள்ளை சட்டைதான் வைத்திருப்பேன். அதை மட்டுமே வைத்துக் கொண்டு தினமும் ஒயிட் அண்ட் ஒயிட்டில் வருபவர் இவர் என்று பேச வைத்தேன்.
அப்போது பேசும்படம் இதழில் என்னை மாதம் இரண்டு ஓவியங்கள்… சிவாஜி, எம்.ஜி.ஆர். பத்மினி, சாவித்ரி என்று… வரைய வைத்து 24 ஓவியங்களை பேசும் படத்தில் வெளியிட்டார் வல்லபன். அப்படி எனக்கு நட்பாக வந்தவர்தான் வல்லபன்” என்று பேசிய சிவக்குமார், தொடர்ந்து பேசியதாவது:
“கடவுள் என்பவனும் காலம் என்பவனும் கொடூரமானவர்கள். கலைஞனாக இருந்தாலும் சரி, பாடகனாக இருந்தாலும் சரி, நடனம் ஆடுபவனாக இருந்தாலும் சரி, இயக்குநராக இருந்தாலும் சரி, அவனுக்கு கடவுள் புகை, மது, மாது என்கிற மூன்று சாபத்தைக் கொடுத்திருக்கிறான். இதை உலக அளவில் சொல்லுவேன்.
கலைஞர்களில் மறைந்தவர்கள் என்று எடுத்துக்கொண்டால் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி இயக்குநர்களும் சரி பலருக்கும் புகை, மது, மாது பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் 25 ஆண்டுகள் இருந்திருப்பார்கள்.
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலம் முக்கியம். கலைஞர்களே புகை, மது, மாது என்கிற மூன்றுக்கும் அடிமையாகாமல் இருங்கள்,” என்று உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது பேச்சு என்றும் பொருந்தக்கூடிய பேச்சு. கேட்டு நடந்தால், அனைவருக்கும் நல்லது.